ராஜபக்ஸர்களின் மில்லியன் கணக்கிலான சொத்து விபரங்களை வெளிப்படுத்தினார் அனுர
நாட்டில் முறைக்கேடான முறையில் சொத்துக்களை குவித்து, நிலங்களை கையகப்படுத்திக் கொண்ட சிரந்தி ராஜபக்ஸ மற்றும் அவரின் மகன்கள் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தின் ஊழல் குறித்த ஆதாரங்கள் இருந்த போதிலும் அவர்களை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
“மோசடியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள்” என்ற தலைப்பின் கீழ் கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஸ குடும்பத்தின் தவறுகளுக்கு எதிராக ஆதாரம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு தெரிவிப்பதாக குற்றம் சுமத்தினார்.
ராஜபக்ஸர்களின் செல்வங்கள் டுபாயில் உள்ள வங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், டுபாய் அரசாங்கம் தகவல்களை வெளியிட மறுக்கின்றது என்றும் ஐ.தே.கட்சியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நான் கூறுவது ஒன்று மட்டுமே, டுபாய்க்கு செல்வதற்கு பதிலாக ஹம்பாந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸ சென்று ராஜபக்ஸர்களின் சொத்து தொடர்பில் தகவல் திரட்டுங்கள் என்றே என அனுர தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஸ, அவரது மகன்களான யோசித ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் டெய்ஸி பாரஸ்ட் ஆகியோரின் பெயர்களின் கீழ் பல்வேறு உடைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அனுர கூறியுள்ளார்.
மேலும், பசில் ராஜபக்ஸவிற்கும் கம்பஹா தொடக்கம் கல்கிஸ்ஸ வரை மற்றும் அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்பு – 7 வரையில் நிலங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸவிற்கு ரூபா 379 மில்லியன் பெறுமதியுள்ள சொந்தமான நிலம் ஒன்று எப்படி இருக்க முடியும் என அனுர இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இவ்வளவு சொத்துக்களை சேர்த்து அவர்கள் என்ன செய்தார்கள்? இவை அனைத்தும் மக்களுக்குச் சேர்ந்தவையே என அனுர தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற திருடர்களே ராஜபக்ஸர்கள் என அவர் கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் இருந்த போதிலும் விசாரணைகள் நீடிக்கப்பட்டே செல்வதாக நீதித்துறை அமைப்பு மீது அனுர விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பசிலுடன் தொடர்புடைய வழக்கு ஒன்று கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, ஆனால் தற்போது அந்த வழக்கு அடுத்த வருட மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
எங்கள் நீதிபதிகளுக்கு வேலைப்பளு அதிகம் இருப்பதால் இந்த வழக்குகள் ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மாத்திரம்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமோ தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளோம், ஆனால் அது தொடர்பில் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.