ரொறொன்ரோ மாணவர்கள் வகுப்புக்களிற்கு செல்ல வழி கண்டுபிடிக்கும் நிலை வியாழக்கிழமை ஏற்படலாம்?.
கனடா-ஆயிரக்கணக்கான ரொறொன்ரோ மாணவர்கள் வியாழக்கிழமை பாடசாலைகளிற்கு செல்வதற்கு புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் பாடசாலை பேரூந்துகளின் சாரதிகள் குழு ஒன்றின் வேலை நிறுத்த கெடு வியாழக்கிழமை என்பதே இந்த அச்சத்திற்கான காரணமாகும்.
வியாழக்கிழமை அதிகாலை 12:01-மணிக்கு முன்பாக தற்காலிக உடன்படிக்கைகளிற்கான முடிவொன்று கிட்டாவிடில் First Student Markham த்தில் பணிபுரியும் சாரதிகள் சட்டபூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகள் வெளிநடப்பு செய்வதால் ஏற்படும் தாக்கம் ரொறொன்ரோ பொது மற்றும் கத்தோலிக்க பாடசாலை சபைகளால் உணரப்படும்.
இந்த குழுவினரின் வேலைநிறுத்தத்தினால் கிட்டத்தட்ட 8,500மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
இரு கல்விசபைகளின் மாணவர்களின் பெற்றோர்களிற்கு வேலை நிறுத்தம் ஏற்படலாம் என்பது குறித்த எச்சரிக்கை கடிதம் கடந்த மாதம் அனுப்ப பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் ஏற்படும் பட்சத்தில் நிறுவம் மாற்று சாரதிகளை நியமிக்க மாட்டாது. அதே போன்று பாடசாலை சபைகள் இரண்டும்- TDSB, TCDSB- வேறொரு பேரூந்து நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய மாட்டாதெனவும் கடிதம் தெரிவித்துள்ளது.