முள்ளிவாய்க்காலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் அம்பலம்
இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
புதுமாத்தளன், வளைஞர்மடம், அம்பலவன், பொக்கனை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவானோர் கொல்லப்பட்டனர்.
இதன்போது மழலைகள், சிறுவர்கள் கொடூராமாக கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
குறிப்பாக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, தமிழ் மக்களின் கல்வி சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளதாக கல்விமான்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்திய உடமைகள் அடங்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
2009.ஆம் ஆண்டு முற்பகுதி காலத்தில் இறுதியுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது மணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்தது. பாடசாலைகள் இயங்க முடியாதவாறு தாக்குதல்கள் உக்கிரம் அடைந்திருந்தன. அத்துடன் பாடசாலைகள் அகதி முகாங்களாக மாறிக்கொண்டிருந்தன.
அந்த நேரத்திலும் நாம் உயிரோடு மீளுவோம் கல்வியை தொடருவோம் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மாணவர்கள் தமது உடமைகளை முள்ளிவாய்க்கால் வரை எடுத்துச்சென்றுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் பல இடங்களில் தற்காலிகமாக இருந்துள்ளனர். இறுதியில் முள்ளிவாய்க்கால் பதுகுழிகளுக்குள் முடங்கிப் போயினர்.
மாணவர்கள் குறித்த இடம் வரை எடுத்து சென்ற உடமைகளை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றிருக்க முடியாதா என்ன? உண்மையில் அவர்கள் உயிரோடு இல்லையா என்பது காலத்தின் கேள்வியாக உள்ளது.