மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடி கெத்து காட்டிய பாகிஸ்தான்
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் (பகல்-இரவு) போட்டி துபாயில் நடந்தது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ஓட்டங்கள் குவித்து ’டிக்ளேர்’ செய்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 357 ஓட்டங்கள் எடுத்தது.
‘பாலோஆன்’ வழங்காத பாகிஸ்தான் அணி 222 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடியது.
ஆனால் மேற்கிந்திய தீவுகளின் அபார பந்துவீச்சில் அந்த அணி 123 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு மேலும் 251 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க ஆரம்பித்தது.
ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த டாரன் பிராவோ சிறப்பாக விளையாடி தனி ஒருவராக தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினார்.அவர் சிறப்பாக ஆடி தனது 8வது சதத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில் பிராவோ 116 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது யாசிர்ஷா பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதன் பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 109 ஓவர்களில் 289 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பிறகு பகல்-இரவு டெஸ்டில் வென்ற 2வது நாடு என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.
முதல் இன்னிங்சில் 302 ஓட்டங்கள் அடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர் அசார் அலி ஆட்டநாயகனான தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.