அஃப்ரிடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நிழல் உலக தாதா?
ஒருநாள் ஆட்டத்திற்கு கடந்த உலகக் கோப்பையுடன் முழுக்கு போட்ட அப்ரிடி, டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் டி20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார்.
எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அப்ரிடி விடை கொடுக்கும் போட்டியில் ஆட விரும்புகிறார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது.
இதுகுறித்து, ஜாவித் மியாந்தத் தெரிவிக்கையில், பணத்திற்காகவே விடை பெறும் போட்டியில் அப்ரிடி ஆட விரும்புவதாக காட்டமாக கூறினார், மேலும் மேட்ச் பிக்ஸிங்கிலும் அவர் ஈடுபட்டார் எனவும் அதற்கு தானே நேரடி சாட்சி என்றும் அதிர்ச்சித் தகவலை கூறினார்.
இதுமட்டுமல்லாமல், தான் கூறியதை அப்ரிடியால் மறுக்க முடியாது எனவும், தன் குழந்தைகள் மீது ஆணையிட்டு தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விற்கவில்லை என அப்ரிடி கூறவேண்டும் என்று கூறினார்.
மியாந்தத்தின் தாக்குதலால் வெகுண்டெலுந்த அப்ரிடி, ஜாவித் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடந்த 12 ஆம் திகதியன்று அப்ரிடிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் உள்ளது, ஏனெனில் தாவூத்தின் மகளைத் தான் ஜாவித் மியாந்தத்தின் மகன் திருமணம் செதுள்ளார்.
இருவருக்குமிடையேயான பிரச்சனை முற்றுவதை உணர்ந்த சக வீரர்களும் முன்னாள் அணித்தலைவர்கள் இம்ரான் கான் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் இருவரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னர் இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பின்னர் மியாந்தத் கூறியதாவது, அப்ரிடி என் இளைய சகோதரர் போன்றவர், நடந்த சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவிப்பதோடு, தான் கூறிய வார்த்தைகளை திரும்பப்பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
அப்ரிடி கூறும்போது, மியாந்தத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும், தாங்கள் கூறிய வார்த்தைகளை திரும்பப்பெற்றுக்கொண்டதே போதுமானது என்றும், அதுவே என் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இடையிலான சலசலப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதே நிதர்சனம்.