சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இன்று (18) நடைபெறவுள்ள நான்கு போட்டிகளில் மாத்தறை சிட்டி, செரெண்டிப், கிறிஸ்டல் பெலஸ், சுப்பர் சன் ஆகிய கழகங்கள் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்டி போகம்பறையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ள செரெண்டிக் கழங்கத்துக்கும் மொரகஸ்முல்ல கழகத்துக்கும் இடையிலான போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இரண்டு அணிகளிலும் செரெண்டிப் கழகத்தில் 3 ஆபிரிக்க வீரர்கள் விளையாடுவதால் அக் கழகம் பலம்வாய்ந்ததாக தென்படுவதுடன் அவ்வணிக்கு இலகுவான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வருடம் சம்பியன்ஸ் லீக்கில் இரண்டு கட்டங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அசன்டே இவான்ஸ், ஓபோரி ஜோர்ஜ், குவாட்ரி ப்றின்ஸ் ஆகிய ஆபிரிக்க வீரர்களும் சிரேஷ்ட உள்ளூர் வீரர் மொஹமத் இஸ்ஸதீன், அணித் தலைவர் ரியாஸ் மொஹமத், கோல்காப்பாளர் மொஹமத் லுத்துபி ஆகியோரும் செரெண்டிப் கழகத்தில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
அணித் தலைவர் ஷானுக்க பெரேரா, எரந்த ப்ரசாத், புபுது சக்குலத, டிலான் மதுஷன்க, ஷெனால் சூரியகே, கோல்காப்பாளர் விமுக்தி மதுவன்த ஆகியோர் செரெண்டிப் கழகத்தக்கு சவாலாக விளையாடக்கூடிய மொரகஸ்முல்ல வீரர்களாவர்.
சுகததாச அரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள போட்டியில் இ.போ.ச.வை கிறிஸ்டல் பெலஸ் எதிர்த்தாடுகிறது.
இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறத் தவறியுள்ள நாவலப்பிட்டி கிறிஸ்டல் பெலஸ் கழகம் இன்றைய போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வாரம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்தை பெனல்டி கோல் ஒன்றின் மூலம் அதிர்ஷ்டவசமாக வெற்றிகொண்ட இ.போ.ச. இன்றைய போட்டியில் கடும் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகின்றது.
இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தைக் கொண்டிருப்பதால் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
இதேவேளை, அணிகள் நிலையில் 3 ஆம் இடத்தில் உள்ள மாத்தறை சிட்டி கழகத்தை குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் தனது சொந்த மைதானமான மாளிகாபிட்டியவில் சந்திக்கவுள்ளது.
இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் மாத்தறை சிட்டி இன்றைய போட்டியில் தனது மூன்றாவது வெற்றியை குறிவைத்து விளையாடவுள்ளது.
மறுபுறத்தில் குருநாகல் பெலிக்கன்ஸ் முதலாவது வெற்றியை ஈட்டுவதகாக இருந்தால் கடைசிவரை கடுமையாக விளையாடவேண்டிவரும்.
சுப்பர் சன், சென் மேரிஸ் கழகங்களுக்கு இடையிலான போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.