எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துசேவை நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக வைத்தியர்கள் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடருமேயானால் இன்னும் ஓரிரு வாரங்களில் சுகாதாரத்துறை முற்றாக செயலிழக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோற்றம்பெற்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில், வாகனங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மையால் பொதுப்போக்குவரத்து உள்ளடங்கலாக ஒட்டுமொத்த போக்குவரத்துசேவையும் படிப்படியாக செயலிழக்கும் நிலையேற்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுகாதாரத்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைவரம் குறித்து வினவியபோதே வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
சுகாதாரத்துறை உள்ளடங்கலாக அத்தியாவசியசேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அனைத்துச்சேவைகளும் எவ்வித இடையூறுமின்றி இயங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
ஆனால் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் உரிய நேரத்திற்கு வைத்தியாசாலைக்குச் செல்லமுடியாத நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.
ஏற்கனவே உயிர்காக்கும் மருந்துகள் உள்ளடங்கலாக அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், வைத்தியர்கள் மனிதாபிமான அடிப்படையில் ஏதேனும் மாற்றுவழிகளைப் பயன்படுத்தி மருத்துவசேவையை இயலுமானவரை வழங்கிவருகின்றனர்.
ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் போக்குவரத்து நெருக்கடி தொடருமேயானால், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் சுகாதாரத்துறை முற்றாக செயலிழக்கக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
இதுகுறித்து சுகாதார அமைச்சுடன் இணைந்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.
அதில் வைத்தியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருந்த போதிலும், இன்னமும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே சுகாதாரத்துறையின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.