ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, வெற்றி பெற்றவராக அவர் பதவி விலகும் வரை நாட்டு மக்கள் துன்பத்தையே அனுபவிக்க வேண்டியேற்படும்.
அவர் பதவி விலகவில்லை எனில் எதிர்வரும் இரண்டு ஆண்டுகள் மாத்திரமல்ல, அதன் பின்னரும் நீண்ட காலத்திற்கு துன்பத்தையே அனுபவிக்க நேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசியல் மறுசீரமைப்பினை ஏற்படுத்துவதில் பொதுஜன பெரமுனவிற்குள் முரண்பட்ட நிலைப்பாடுகளே காணப்படுகின்றன.
அதன் காரணமாகவே 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுவதிலும் இழுபறி நிலைமை காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டதன் பின்னர் 21 குறித்து சிந்திக்கலாம் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் மறுசீரமைப்பின் ஊடான மாற்றம் வேண்டும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பிலும் , பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று பதவி விலகும் வரை நாட்டு மக்கள் துன்பத்தையே அனுபவிக்க வேண்டியேற்படும்.
அவர் பதவி விலகவில்லை எனில் எதிர்வரும் இரண்டு ஆண்டுகள் மாத்திரமல்ல. அதன் பின்னரும் நீண்ட காலத்திற்கு துன்பத்தையே அனுபவிக்க வேண்டியேற்படும்.
அடுத்த வாரத்திலிருந்து சீனி இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.