இந்த மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக செயற்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
அந்த வேலைத்திட்டம் வெற்றியடையும்வரை மக்கள் பொறுமையும் செயற்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலியல் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் 14 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு முகம்கொடுத்திருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுத்து மக்களுக்கு சிறந்ததொரு வாழ்கை முறையை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
அந்த வேலைத்திட்டத்தில் ஆரம்ப நடவடிக்கையாக இருப்பது எரிபொருள், எரிவாயு, மின்சாரம், மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இடம்பெற்றுவரும் வரிசையை இல்லாமலாக்கி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதாகும்.
மேலும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட நாள் முதல் இன்றுவரை அதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாக படிப்படியாக பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்று வருகின்றது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியம் உட்பட உலகில் ஏனைய நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் மிகவும் நெருக்கான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, நாடு எதி்ர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து மீட்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
நாங்கள் அனைவரும் எந்த வரப்பிரசாதங்களைம் பெற்றுக்கொள்ளாமல், வேலைத்திட்டங்களை வெற்றியடையச்செய்வதற்காக உத்துழைப்பை வழங்கி வருகின்றோம்.
அத்துடன் இந்த மாதம் இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான இணக்கப்பாட்டுக்கு வருமுடியுமாகும் என பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியுமாகும். அதேபோன்று ஏற்பட்டிருக்கும் உணவு பற்றாக்குறை காரணமாக நாட்டுக்குள் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதன் ஊடாக நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் உணவு பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமாகும்.
மேலும் இன்று அதிகமானவர்கள் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து வருகின்றனர். ஆனால் நாட்டில் தற்போது முக்கிய தேவையாக இருப்பது அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் அல்ல என்றார்.