பொருளாதாரநெருக்கடிகளில் இருந்துவிடுபடுவதற்கும் கடன் சுமைகளில் இருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ள போதிலும் சீனா இன்னமும் உதவவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையால் சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனுதவியை பெற முடியவில்லை,அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கும் சீனா பதிலளிக்கவில்லை என பேட்டியொன்றில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடுகள் குறித்து முன்னர் போன்று சீனா கவனம் செலுத்துவதில்லை என தெரிவித்திருந்த இலங்கை ஜனாதிபதி சீனா தனது மூலோபாய கவனத்தை தென்கிழக்கு ஆசியா ஆபிரிக்கா நோக்கி திரும்புகின்றது போல தோன்றுகின்றது எனவும் குறிப்பிட்டிருநதார்.
இலங்கைக்கு உதவ தயார் என சீனா தெரிவித்துள்ளது என குறிப்பிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ச முன்னைய கடன்களை செலுத்துவதற்காக சீனா கடன்வழங்குவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.ஜனாதிபதியின் இந்த கருத்து குறித்து பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் சீனா தனது பாராம்பரிய நட்பு மற்றும் அயல்நாடான எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அனுதாபத்துடன் அவதானித்து வருகின்றது,என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு சீனா தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை வழங்கி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் பெறுமதியான அவசரமனிதாபிமான உதவிகளை சீனா வழங்கும்,முதல் தொகுதி மருந்துகள் ஏற்கனவே இலங்கை சென்றடைந்துவிட்டன, முதல் தொகுதி அரிசியுடன் கப்பல் ஏற்கனவே புறப்பட்டுவிட்டது,என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அனைத்து தரப்பும் மக்களிற்கும் உதவுவதற்காக பல தொகுதிகள் மற்றும் பல தரப்பட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தனது வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது என அறிவித்ததும் சீனா தொடர்புடைய பிணைமுறிகள் கடன்களை ஒழுங்காக கையாள்வதற்குகான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் மேற்கொண்டது என வெளிவிவகார பேச்சாளர்தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கு சீனா தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிய நாடுகள் சர்வதேச அமைப்புகள் நிதி அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயாராகவுள்ளது, இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும்,அதன் கடன்கைளை குறைப்பதற்கும்,பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் உதவுவதற்கு சீனா பங்களிப்பை வழங்கும் எனவும் சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களினதும்,நிதி சகாக்களினதும் நலன்களை பாதுகாப்பதற்கான நியாபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,தனது உள்நாட்டு முதலீடு நிதி சூழலின் ஸ்திரதன்மையையும் கௌரவத்தையும் தொடர்ந்து பேணும் எனவும் சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய நாடுகள் உட்பட சீனாவின் அயல்நாடுகள் சீனாவின் இராஜதந்திரத்தில் முன்னுரிமை பெற்றுள்ளன,எனவும் சீனா வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.