நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் விசேஷட உரையாற்றவுள்ளார்.
அத்துடன் பிரதமர் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ரில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டத்தின் கீழான தீர்மானம் செவ்வாய்க்கிழமை விவாதமின்றிய நிலையில் நிறைவேற்றப்படவுள்ளன.
இதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றவுள்ளதுடன், பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றையதினம் மாலை வரை நடைபெறவுள்ளது.
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு பிரேரணையை அன்றையதினம் சமர்ப்பிக்கவுள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் புதன்கிழமை இடம்பெறும்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் பொது மனுக்கள் பற்றிய குழு போன்ற குழுக்கள் மீளாய்வுகளை மேற்கொள்ளும் போது பாராளுமன்றத்தில் அவற்றை பலப்படுத்துவதற்காக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.