பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கராச்சி, சவுத்எண்ட் கழக கிரிக்கெட் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற 2 ஆவது மகளிர் கிரிக்கெட் போட்டியில் 73 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி மீதமிருக்க 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் பாகிஸ்தான் தனதாக்கிக் கொண்டது.
சில தினங்களுக்கு முன்னர் மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்த இலங்கைக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சித்ரா ஆமீன் குவித்த அபார சதம், முனீபா அலியின் அரைச் சதம், பாத்திமா சானாவின் 4 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தான் மகளிர் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.
சித்ரா ஆமீன், முனிபா அலி ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் சாதனைமிகு 153 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இந்த இணைப்பாட்டம் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் அதிசிறந்த ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகும்.
முனீபா அலி 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் அணித் தலைவி பிஸ்மா மாறூபுடன் மேலும் 74 ஓட்டங்களை சித்ரா ஆமீன் பகிர்ந்தார்.
மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய சித்ரா ஆமீன் 11 பவுண்டறிகளுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார். மகளிர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சித்ரா ஆமீன் குவித்த இரண்டாவது சதம் இதுவாகும்.
பிஸ்மா மாறூவ் 36 ஓட்டங்களுடனும் நிதா தார் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
254 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் 7 துடுப்பாட்ட வீராங்கனைகள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் இருவர் மாத்திரமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
ஹாசினி பெரேரா (14), சமரி அத்தபத்து (16), ஹன்சிமா கருணாரட்ன (27), ப்ரசாதனி மாதவி (27) ஆகிய நால்வரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கையின் மொத்த எண்ணிக்கை 90 ஓட்டங்களாக இருந்தது.
ஹர்ஷிதா மாதவி, காவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 61 ஓட்டங்கள் இலங்கை மகளிர் அணியை ஒரளவு கௌரவ நிலையை அடைய வைத்தது.
ஹர்ஷிதா மாதவி 41 ஓட்டங்களையும் காவிஷா டில்ஹாரி 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் நிலக்ஷி டி சில்வா 17 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை துடுப்பாட்டத்தில் இவர்களைவிட வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெறவில்லை.
பாகிஸ்தான் பந்துவீச்சில் பாத்திமா சானா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஒமய்மா சொஹெய்ல் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.