எவரும் எனது கணவரை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் மனைவி ஒலெனா ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் படையினர் உக்ரேன் மீது படையெடுப்பை மேற்கொண்டதிலிருந்து தொடர்ந்து சுமார் 3 மாத காலமாக தமது பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடமொன்றில் தங்கியிருந்த ஒலெனா, முதல் தடவையாக தனது கணவருடன் இணைந்து தொலைக்காட்சி நேர்காணல நிகழ்ச்சியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) தோன்றினார். இந்த நேர்காணலானது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது
ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்ட நிலையில் ஒலெனா தனது 9 வயது மற்றும் 17 வயதுடைய பிள்ளைகள் சகிதம் பாதுகாப்பான இடமொன்றில் தஞ்சமடைந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி நேர்காணலில் தனது கணவர் சகிதம் தோன்றிய ஒலெனா, எவரும் குறிப்பாக போர் உட்பட எதுவும் எனது கணவரை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது என உணர்வு மேலீட்டுடன்; கூறினார்.
போர் ஆரம்பித்ததிலிருந்து வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மாறி விட்டார் என என்னால் கூற முடியாது. அவர் முன்னர் நம்பகமான கணவராகவும் நம்பகமான மனிதராகவும் இருந்தார். அவர் அவ்வாறே தொடர்ந்து உள்ளார். அவருடைய கண்ணோட்டம் மாறவில்லை என ஒலெனா தெரிவித்தார்.
திரைக்கதை எழுத்தாளரான ஒலெனா தெரிவிக்கையில், தான் தனது கணவரது உரைகளின் தீவிர ரசிகையாக உள்ளதாகக் கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, நாம் இந்தப் போரை ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்தப் போரை முடித்து வைப்பவர்களாக நாம் இருப்போம் என்பதே எனது செய்தி எனக் கூறினார்.