நவம்பரில் கனடா- ரஷ்யா இடையே ஆர்ட்டிக் மாநாடு
சிரியா மற்றும் உக்ரேன் விவகாரங்களில் வேறுபாடுகள் இருந்த போதிலும் கனடா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆர்ட்டிக் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டாவா கார்லேடன் பல்கலைக் கழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கனேடிய வெளியுறவுத்தறை அமைச்சர் ஸ்டீபன் டையொனின் நாடாளுமன்ற செயலாளர் பாம் கோல்ட்ஸ்மித் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிரியா மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் நிலைப்பாடுகளை கனடா ஏற்கவில்லை எனினும் ஆர்ட்டிக்கில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கிரைமியா ரஷ்யாவுடன் இணைந்து கொண்டதன் பின்னர் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாத போராளிகளை ஆதரித்து வரும் ரஷ்யா சிரியாவில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு காரணமாக உள்ள சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கும் தனது இராணுவ பங்களிப்பை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.