கறுப்பினத்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: பொலிஸாரின் வெறிச்செயல்
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் அதிகாரிகளால் நிராயுதபாணியான கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தின் துல்சா என்ற பிராந்தியத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளியில் 40 வயதான ரெடேன்ஸ் கிரட்சர் என்ற கறுப்பினத்தவர் பொலிஸ் அதிகாரிகளால் துப்பாக்கி முனையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும், அவர் கைகளை மேலே தூக்கியபடி நிற்கின்ற போதிலும், பொலிஸ் அதிகாரியால் அவர் சுடப்படுவதும் காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் ஒரு அதிகாரி மாத்திரம் தொடர்புபடவில்லை என்பதுடன் ஒரு பெண் அதிகாரியால் ஆரம்பத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் பின்னர் மேலும் 3 பேரை உள்ளடக்கிய குழுவினால் சூழப்படுகின்றார்.
பின்னர் அவர்களின் சம்பாஷனையின் முடிவில் ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சுடுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்தே அவர் சுடப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறான போதும், பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்றுள்ள காணொளி கொல்லப்பட்டவரை நோக்கியதாக இருப்பதன் காரணமாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை இனங்காண்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.