பிரம்டன் பீட்சா கடை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: 3ஆம் சந்தேக நபர் கைது
பிரம்டன் பகுதியில் அமைந்துள்ள பீட்சா உணவகத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரை பிரம்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
21 வயதுடைய குறித்த சந்தேக நபர், துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற Wexford Square plaza வணிக வளாகத்தில் வைத்து கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி குறித்த வணிக வளாகத்தில் அமைந்துள்ள டொமினோஸ் பீட்சா உணவகத்தில் பணியாற்றும் 24 வயதான ஒருவர் சுடப்பட்டதுடன், தற்போது அவர் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற தினத்தன்று இரவிலும் மற்றையவர் ஓகஸ்ட் 16 ஆம் திகதியும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டவர் மீது ஏற்கனவே துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்த 6 சம்பவங்களும், கொலை தொடர்பான ஒரு சம்பவமும் பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.