நண்பியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்ய திட்டம் தீட்டிய மாணவர்கள்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள St-Hyacinthe என்ற நகரை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர், தங்களுடன் கூடவே படித்த நண்பியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
14 மற்றும் 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் தான் இந்த சதி திட்டத்தை தீட்டியுள்ளனர். இதுமட்டுமில்லாமல், வேறு 3 மாணவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த சதி திட்டம் தொடர்பாக இரண்டு மாணவர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தகவல்களை பரிமாறியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த தகவலை, சதி திட்டம் தீட்டிய மாணவர்களில் ஒருவனது பெற்றோர் கண்டுபிடித்து துணிச்சலாக பொலஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளனர். அதற்கமைய பொலிஸார் உடனடியாக மாணவர்கள் பயிலும் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். அங்கு இரண்டு மாணவர்களின் ‘லொக்கரை’ சோதனை செய்தபோது, அதில் கூர்மையான கத்தி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
கொலை செய்யும் திட்டத்திற்காக இருவரும் கத்தியை அங்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரின் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.