தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியது.
அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை, புசல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர பகுதிகளில் இன்று இந்நிலைமையே காணப்பட்டது.
சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது.
பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் வெளியிடும் கருத்துகள் மூலம் அறியமுடிந்தது.
வருடம் ஒருமுறைதான் பண்டிகை வருகிறது, அதனால்தான் கடன்பட்டாவது கொண்டாடுகின்றோம் என சிலர் கூறுவதை கேட்கமுடிந்தது.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதால் கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்கள் இன்று தமது வீடுகளை நோக்கி திரும்பினர்.
இதனால் பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ சாரதிகளுக்கும் சிறந்த வருமானம் கிடைத்தது.
அதேவேளை, நகர்பகுதிகளுக்கு வந்திருந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் முறையாக முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.
கடைகளுக்கு முன்னால் கைககளை கழுவுவதற்கு எந்தவொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. இதனால் கொரோனா தீபாவளி கொத்தணி உருவாகக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]