தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வாரியர்ஸை வீழ்த்திய காரைக்குடி காளை
தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. இதில் காரைக்கால் காளை அணி ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்ற காஞ்சி வாரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய காஞ்சி வாரியர்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் ஓட்டங்கள் எடுக்காமல் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்நிலையில், 121 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய காரைக்குடி காளை அணி தடுமாற்றத்துடன் ஆரம்பித்து விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது.
இதைத்தொடர்ந்து, சீனிவாசன் அதிரடியாக ஆட அணியின் ஓட்டங்கள் அதிகரிக்க தொடங்கியது. இறுதியில் 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்கள்எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
சீனிவாசன் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் காரைக்குடி காளை அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தது.
மேலும், திருநெல்வேலியில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், தூத்துக்குடி அணியும் மோதுகின்றன. அடுத்த 17-ம் திகதி சென்னையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள், சென்னையில் 18-ம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.