விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் நாடு கடத்தப்பட உள்ளார்
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த நிலையில், இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கடந்த வியாழக்கிழமை போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்த போது புனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்து புனே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவர் இந்தியாவில் நடந்த பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சுதன் சுப்பையா என்ற இந்த சந்தே நபர் மாரிமுத்து என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பாட்டு ரீதியான உறுப்பினராக இருந்துள்ளார்.
சந்தேக நபரை நாடு கடத்த தற்காலிக வீசா அனுமதியை வழங்குமாறு புனே பொலிஸார், இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் சந்தேக நபர் அடுத்த வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.