இலங்கையின் சாதனையை முறியடித்து இங்கிலாந்து புதிய சாதனை!
இந்த போட்டியில் சர்வதேச அரங்கில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்பித்து வைத்த வான வேடிக்கையை இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் அழகாக முடித்து வைத்தார்.
ஆரம்பம் முதலே அடித்தாடுவதில் ஆர்வம் காட்டிய ஆரம்ப வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 171 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த அணித்தலைவர் மோர்கன் மற்றும் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் ஆகியோர் 72 பந்துகளில் 161 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க இங்கிலாந்து புதிய உலக சாதனையை தனதாக்கியது.
அந்தவகையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 171 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தது.
2006ஆம் ஆண்டு இலங்கை அணி, நெதர்லாந்து அணிக்கெதிராக 9 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்கள் பெற்றதே இதுவரையான உலக சாதனையாக இருந்தது.
10 ஆண்டுகால உலக சாதனை ஒருநாள் அரங்கில் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இத் தொடரில், ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.