துப்பாக்கியுடன் கனடாவுக்குள் நுளையும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்!
கனடாவுக்குள் நுளையும் அமெரிக்கர்கள் தம்முடன் துப்பாக்கிகளை எடுத்துவந்தால், அவற்றை முறையாக பதிவு செய்யுமாறு, கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க கனேடிய எல்லைச் சாவடிகளில் கைப்பற்றப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ள நிலையிலேயே, துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பிலான கனேடிய சட்டதிட்டங்களை, கனடாவுக்குப் பயணிக்கும் அமெரிக்கர்களுக்கும் தெளிவுபடுத்தும் செயற்திட்டத்தினை கனேடிய எல்லைப் பாதுகாவல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, கனேடிய எல்லைப் பாதுகாப்பு திணைக்களம், அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
துப்பாக்கிகளை எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளிடம் முறையாக பதிவுசெய்யத்தவறும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்பதுடன், அவர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
துப்பாக்கிகளை பதிவு செய்பவர்களும், அவை கனடாவுக்குள் எடுத்துவரப்பட வேண்டியதன் காரணத்தினை, குறிப்பாக போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, பழுது பார்ப்பதற்காக அல்லது திருத்துவதற்காக போன்ற விபரங்களை அதிகாரிகளுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான துப்பாக்கிகளுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், பயணத்தின் போது எடுத்துச் செல்லக்கூடிய முறையில் அவை பொதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கியை எடுத்துவருவதற்கான காரணம் சரியாக இல்லாதவிடத்து, அல்லது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதவிடத்து, அவற்றை திருப்பி எடுத்துச் செல்லுமாறான பணிப்பினை அதிகாரிகள் விடுக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளின் பாவனை தொடர்பிலான கனடாவின் சட்டதிட்டங்களை சரியாக அறிந்திராத அமெரிக்கர்கள், அதனை தமது நாட்டு நடைமுறைகளின்படி எடுத்துவருவதாகவும், இதனால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.