”வெள்ளி மங்கை” பி.வி.சிந்துவுக்கு சி.ஆர்.பி.எப். கமாண்டர் பதவி!
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ ஜெனீரோவில் ஒலிம்பிக் தொடர் கடந்த 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்து தலைநிமிரச் செய்தார்.
இவருக்கு மத்திய அரசு விளையாட்டுத்துறையின் உயர்ந்த விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி இன்று விருதை ஜனாதிபதி வழங்கினார்.
வாழ்த்து மழையும், பரிசு மழையும் குவிந்து வரும் நிலையில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (சி.ஆர்.பி.எப்) பி.வி. சிந்துவுக்கு கமாண்டர் பதவியும், விளம்பர தூதர் பதவியும் கொடுக்க முடிவு செய்துள்ளது.
வழக்கமான நடைமுறையின்படி சி.ஆர்.பி.எப். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு கிடைத்தபின், அதிகாரப்பூர்வமாக சிந்துவுக்கு பதவி வழங்கப்படும்.
மத்திய ரிசர்வ் பொலிஸ் படை கமாண்டர் பதவி என்பது, பொலிஸ் துறையில் எஸ்.பி. பதவிக்கு இணையானது. கமாண்டருக்கு கீழ் 1000 வீரர்கள் பணிபுரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.