தோட்டத்தை விடுவிக்க பணம் கேட்கும் இராணுவம்
படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் கடந்த வாரம் இராணுவமுகாமில் சந்திப்பு இடம்பெற்றது. அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முழங்காவிலில் உள்ள கஜு தோட்டம் விடுவிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது.
அந்தத் தோட்டத்தை விடுவிப்பதற்கு தற்போது படையினர் தயாராகவே உள்ளனர். அந்தப் பண்ணை 2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரைக்கும் படையினரால் பெருந்தொகைப் பணம் செலவு செய்யப்பட்டே பராமரிக்கப்படுகின்றது.
இவ்வாறு இதுவரை காலமும் செலவு செய்த தொகையை மட்டும் வழங்க முன்வரும் சந்தர்ப்பத்தில் உடனடியாகப் பண்ணையை விடுவிக்க முடியும் என்று இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள வட்டக்கச்சியில் உள்ள 419 ஏக்கர் பண்ணை, அக்கராயனிலுள்ள 80 ஏக்கர் கரும்புத் தோட்டம், மலையாளபுரம் , கண்டாவளை உள்ளிட்ட நிலங்கள் விடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.