தவறான தகவல்களை வழங்கியதாக கனேடிய சுகாதார அமைச்சர் மீது குற்றச்சாட்டு
சர்ச்சைக்குரிய உல்லாசப் பயண செலவுகள் குறித்த தகவல்களை வழங்கத் தவறியதாக கனேடிய சுகாதார அமைச்சர் ஜேன் பில்பொட் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உல்லாச கார்களை பயன்படுத்துவது குறித்து கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் அல்பாஸின் கேள்விக்கு எந்தவொரு உல்லாச வாடகைக் கார்களையும் தாம் பயன்படுத்தவில்லை என ஜேன் பில்பொட்டின் கையெழுத்துடன் பதிலிறுப்பு ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரை அரசாங்க பயணங்களுக்காக எவ்வித வாடகைக் கார்களையும் சுகாதார அமைச்சர் பயன்படுத்தவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க கூட்டாச்சித் தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி தனிநபருக்கு சொந்தமாக உல்லாச வாடகைக் கார் சேவையை 1700 டொலருக்கு உபயோகித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாடகைக் கார் பயன்பாடானது மேலே குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் அடங்குவதால் இது குறித்து கீழ்சபையில் விளக்கமளிப்பதற்கு பில்பொட் தவறியதாகவே தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகப் படியான செலவுகளுக்காகவும் சரியான தகவல்களை வழங்குவதற்கு தவறியமைக்காகவும் மன்னிப்பு கோரியுள்ள ஜேன் பில்பொட் தவறு மீண்டும் ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் உல்லாச வாடகைக்கார் மூலம் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளை தனிப்பட்ட முறையில் திரும்பிச் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.