கனடா ஒன்ராறியோ டூச் ரிவர் தொகுதியில் சாதனை படைத்து பலத்தை வெளிப்படுத்துமா தமிழினம்??
பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பலமுள்ள இனமாக கனடியத் தமிழர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் சில தொகுதிகளை எமதாக்கிக் கொள்ளவேண்டும். அதில் அனைத்து முக்கிய கட்சிகளின் சார்பில் தமிழர்களே போட்டியிடும் சூழலை ஏற்படுத்தவேண்டும் அதனூடாக தொடர்ந்த தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்திக் கொளளவேண்டும் என்பதை முதலில்; எமது சமூகத்தில் விதைத்தவன் நான்.
அப்போது எனக்கு கிடைத்த பெயர் நேருக்கு சுத்த விசர். மூன்று தமிழர்கள் போட்டிபோட்டு மூன்று பேரும் தோக்கிறதுக்கு வழிசொல்லுகிறார் என்றார்கள்.
பின்னர் அதில் தெளிவுபெற்று இல்லை அது நல்ல வழிதான் எந்தக்கட்சிக்கு எப்போது காத்தடிக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் எங்கு காற்றடித்தாலும் மூன்று முக்கிய கட்சிகள் சார்பிலும் தமிழர்கள் போட்டியிட்டால் ஒருவர் வெல்வது எப்படியும் நிச்சயம் என்ற புரிதல் ஏற்பட்டதன் பின் தற்போதாவது தமிழினம் அதற்கு தயாராகிவிட்டது என்ற மகிழ்ச்சி;
பலரிடம் நடைபெறவுள்ள ரூச் ரிவர் இடைத்தேர்தலில் ஏற்பட்டதும் இங்கு நினைவில் கொள்ளலாம்.ஆனால் அதில் ஈற்றில் கோட்டைவிட்டு இரு தமிழர்களே களத்தில் உள்ள நிலையில் இது தமிழரின் வெற்றி வாய்ப்பை பாதித்துவிடுமா? என்ற அச்சமே பலரிடமும் உள்ளதை காண முடிகிறது. எந்நிலை உருவானாலும் அதனை எமக்கு சாதகமாக கொண்டு சாதித்துக் காட்டுவதே இனம் சார்ந்த வலுநிலை. இந்நிலையில் தமிழ் இனமாக இத்தேர்தல் களத்தில் எதனைச் சாதிக்கலாம்.
இரு தமிழர் போட்டியிடும் போது தமிழர் இல்லாத ஒருவரை களத்தில் இறக்கினால் தமிழர் வாக்கு பிரியும் போது தாம் வென்றுவிடலாம் என்ற கணக்கில் தமிழர் இல்லாத ஒருவரை களத்தில் இறக்கியுள்ளது கன்சவேட்டிவ் கட்சி. இதில் அவர்கள் வெற்றிபெற அனுமதித்தால் அதுவே தமிழருக்கு எதிராக ஏனையவர்களாலும் கைக்கொள்ளப்படும் ஆபாயம் இருக்கிறது.
இந்நிலையில் போட்டியிடும் இரு தமிழரும் தேர்தல் முடிவில் முறையே முதலாம் இரண்டாம் நிலைகளில் வந்தால் எதிர்காலத்தில் இத் தொகுதி முழுமையாக தமிழர் தொகுதியாக மாற்றப்படுவது மட்டுமன்றி இவ்வாறான தமிழர் இல்லதா ஒருவரை களமிறக்கும் முயற்சியையும் கட்சிகள் முன்னெடுக்க மாட்டா..
இது சாத்தியமா? என நீங்கள் எழுப்பும் கேள்வி எனக்கு புரிகிறது. ஆம் இலகுவில் சாத்தியம். ரூச் ரிவர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 88592. ஒன்ராரியோ பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பு மிக குறைவாகவே அமைவது உண்டு. கடந்த தேர்தலில் 2014 இல் 52.1 சதவீத வாக்குப்திவும் 2011 இல் 48.1 சதவீத வாக்குப்பதிவும் அமைந்தன. ரூச் ரிவர் தொகுதி ஒன்ராரியோவில் வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளில் ஒன்று. 2014இல் 47.48 சதவீதமும் 2011இல் 42.9 சதவீதமும் 2007இல் 41.8 சதவீத வாக்குப்பதிவுமே அமைந்தன.
பொதுவாக இடைத்தேர்தல் என்று வரும் போது வாக்குப்பதிவு மேலும் வீழ்ச்சியடைவது வழக்கம். 1996இற்கு பின்னர் ஒன்ராரியோவில் நடைபெற்ற 28 இடைத்தேர்தல்களில் ஒன்றில் கூட வாக்குப்பதிவு 40 சதவீதத்தை கடக்கவில்லை. கடந்த முறை 2005 நவம்பர் 24இல் ரூச் ரிவரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் வெறும் 16255 மட்டுமே. சரி இத்தேர்தலில் 30 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம் அது 26500 வாக்குப் பதிவையே கொண்டிருக்கும்.
இந்நிலையில் தமிழர்கள் நீதன் சானும், பிரகல் திருவும் எவ்வாறு முதல் இரண்டு இடங்களையும் பெற முடியும். சரி தொகுதியின் ள்ளார்ந்த நிலையை சற்று பார்ப்போம். இத்தொகுதியில் வாழும் தமிழ் வாக்காளர்கள் தொகை 12 ஆயிரத்திற்கு மேல். அதாவது கனடாவிலேயே அதிக தமிழ் வாக்காளர்கள் வாழும் தொகுதி இது. ஒவவொரு தமிழ் வாக்கும் இத்தேர்தலில் முதன்மை பெறுகிறது.
தமிழர் ஒவ்வொருவரும் வாக்களிப்பதை உறுதி செய்வது தமிழர் சமூகத்தின் கடமை. அதேவேளை தமிழர்கள் தமிழர் ஒருவருக்கே வாக்களிக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதும் இனத்தின் கடமை. இதை சனநாயக விரோத செயற்பாடு இன சிலர் முலாமிட முயற்சிக்கலாம். எவ்வாறு ஒரு கட்சி உறுப்பினர்கள் இக்கட்சி சார்ந்து மட்டுமே தொழிற்படுகின்றார்களோ அதேபோன்று ஒரு இனக்குழுமமும் இனம் சார்ந்து தொழிற்ப்படுவதும் சனநாயகமே. இவ்வாறே பல இனங்கள் கனடிய தேசத்திலும் தங்கள் நிலையை அரசியலில் வலுவுடன் தக்கவைத்துள்ளன. அவ்வாறு யூத, சீக்கிய, இத்தாலிய இனக்குழுமங்களை முதன்மையாக குறிப்பிடலாம்.
கனடாவில் சிறுபான்மை இன மக்களை அதிகம் கொண்ட தொகுதியும் ரூச் ரிவர்தான். சீன, பிலீப்பீனிய, கரியிய இந்திய மக்களையும் இத்தொகுதி அதிகம் கொண்டுள்ளது. கனடாவிலலேயே இந்துக்களை அதிகம் கொண்ட தொகுதியும் இதுவே. அதாவது 13.7 சதவீதம்இந்துக்கள்.
சரி முதல் இரண்டு இடங்களையும் பெற தமிழ் வேட்பாளர்களுக்கு உள்ள வலுநிலை என்ன?
முதலில் நீதன் சானைப் பார்ப்போம். தொகுதி முழுமையாக அதிகம் அறியப்பட்ட வேட்பாளர் இவரே. அதே தொகுதியில் வாழும் ஒரே வேட்பாளரும் இவரே. 2014 மற்றும் 2011 தேர்தலிகளிலும் இதே தொகுதியில் புதிய சனநாயகக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர். 2014இல் 13019 வாக்குகளையும், 2011இல் 13088 வாக்குகளையும் பெற்று வலுவான இரண்டாம் இடத்தை பெற்றார்.
இரண்டு தேர்தல்களிலும் ஒரேயளவு வாக்குகளைப் பெற்ற இவர் அதில் 80 சதவீதத்தை இம்முறையும் பெற்றால் வெற்றியை உறுதிப்படுத்தலாம். ஏற்கனே பெற்ற வாக்குகளை தக்கவைத்தல் அதேவேளை புதிய வாக்குகளை அணிசேர்த்தலில் இவருடைய வெற்றி தங்கியுள்ளது. எந்தவொரு தேர்தலையும் விட்டுவைப்பதில்லை என்ற குறை இவரிடம் உள்ள பலவீனம். ரஸ்டி தேர்தலை தவிர்த்திருக்கலாம். பல தேர்தல் பிரசன்னம் தேர்தல் களத்தை எதிர்கொள்ள இவரை பலப்படுத்தியும் உள்ளது என்பது இன்னொரு வலுநிலை.
லிபரல் கட்சி சார்பில் போட்டியிடும் பிரகல் திருவை எடுத்துக் கொண்டால், நீதன் சானைப் போன்று தமிழர்களுக்கு அறிமுகமானவர். இருவரும் 37 வயது நிரம்பிய நம்பிக்கை தருகின்ற இளையவர்கள்.
1999ஆம் ஆண்டு ரூச் ரிவர் தொகுதி முதலில் உருவானதன் பின் நடைபெற்ற 6 தேர்தல்களிலும் லிபரல் கட்சியே வென்று அக்கட்சியின் கோட்டை போல் இத்தொகுதி திகழ்ந்தமை இவரது வலுநிலை. கடசி வாக்குகளை தக்கவைத்தாலேயே இவர் வெற்றியை நோக்கி நகரமுடியும். முதல் இரண்டு இடங்களில் கட்டாயம் வரமுடியும். 13 ஆண்டுகளாக லிபரல் கட்சி ஆட்சியில் உள்ளதால் ஏற்ப்பட்டுள்ள சரிவும், பழைய பாராளுமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதால் கிடைக்காமல் போன தார்மீக ஆதரவும் இவர் எதிர்கொள்ளும் சவால் நிலைகள்.
நீதன் சானும், பிரகல் திருவும் முதல் இரண்டு இடங்களில் ஒன்றைப் பெற தமிழர்கள் நாம் என்ன செய்யலாம். அத்;தொகுதியில் வாழ்ந்தால் கட்டாயம் வாக்களிப்பது. முடிந்தால் முன்கூட்டிய வாக்குப்பதிவில் சென்று வாக்களிப்பது. தவறாது இருவரில் ஒரு தமிழருக்கு மட்டுமே வாக்களிப்பது. தொகுதிக்கு வெளியே வாழ்ந்தால் தொகுதியில் உள்ள தெரிந்த தமிழர்கள் அனைவரையும் வாக்களிப்பதை உறுதிப்படுத்துவது. தேர்தலுக்கு முந்திய பரப்புரையிலும், தேர்தல் அன்றும் தொண்டர்களாக இவர்கள் பரப்புரையில் ஒத்தாசையாக இருப்பது. அதிகரித்த தொண்டர் தொகை முதல் இரண்டு இடங்களையும் தமிழர்கள் பெற வழிசமைக்கும். அதேவேளை
தெரிந்த அருகில் உள்ள ஏனைய இனத்தவர்களின் வாக்குகளையும் தமிழர் வேட்பாளர்களுக்கே பெற்றுக் கொடுப்பது என நீங்கள் ஒவ்வொருவரும் தமிழினப் பலத்தை வெளிப்படுத்தலாம்.
அதேவேளை நீதன் சானுக்கும், பிரகல் திருவுக்கும் ஒரு வேண்டுகோள், தமிழ் மக்களிடம் சென்று உங்களுக்காக கட்டாயம் தவறாது வாக்குக் கேளுங்கள் ஆனால் உங்கள் தொண்டர்கள் உங்கள் இருவருக்கும் இடையிலான மோதலாக இதனை மாற்ற அனுமதியாதீர்கள். அது எம் மக்களை வாக்களிப்பில் இருந்து தவிர்த்துவிடும். இருவரில் ஒருவரை தெரிவு செய்து வாக்களிக்க அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அதேவேளை தொகுதியல் உள்ள ஏனைய இனக்குழுமங்கள், இளையவர்கள், முதியவர்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகளை வரிவாக்கி கடினமாக வெற்றிக்காக உழையுங்கள்.
தமிழ் ஊடகங்கள் இனமான உணர்வுடன் தமிழர் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தேர்தலை மக்கள் சார்ந்து அணுகுவார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் உண்டு. தமது வரலாற்றுக் கடமையை அவர்கள் சரிவரச் செய்வார்கள் என்று நம்புவோம்.
இக்கருத்துக்களை முன்வைப்பதால் என்னை சிலர் கன்சவேட்டிக் கட்சிக்கு எதிரானனவனாகவோ அல்லது பற்றிக் பிரவுணுக்கு எதிரானவனாகவோ சித்தரிக்க முயலலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது யாதெனில் பற்றிக் பிரவுணை 2009 பெப்பிரவரியில் முள்ளிவாய்கால் பேரவலத்தின் போது முதலில் அவரின் தொகுதியிலேயே சந்தித்து தமிழர் விவகாரத்தை விளக்கியவன், அவரை தமிழர் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவனும் நானே.
இருவரும் ஒருவரை ஒருவர் சகோதரே என்றே அழைத்துக் கொள்வோம். அதற்கு பின்னர் தமிழரின் ஆதரவு தூணாக நின்றவர்களில் அவரும் ஒருவர் என்பதில் கருத்துவேறுபாடு என்றும் கிடையாது. அதன் பிரதிபலனாக தமிழ் மக்கள் பற்றிக்கின் பின்னால் அணிதிரண்டு அவரை ஒன்ராயோ கென்சவேட்டிவ் தலைவராக்கி அழகுபார்த்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் அதிகம் வாழும் தொகுதியில் ஒரு தமிழரை வேட்பாளராக்கி பற்றிக் வெளிப்படுத்தியிருக்கலாம். தவறான ஆலோசனையால் தவறொன்று இனம் சார்ந்து இளைக்கப்பட்டுள்ளது. ரெப் பேட்டின் அரசியல் மீளெளிச்சிக்காக தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்வி எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகியுள்ளது. இவ்வாறான ஒரு சூழல் பிரம்டனில் ஏற்பட்டிருந்தால் சீக்கியரில்லாத ஒரு வேட்பாளரை சீக்கிய சமூகம் அனுமதித்திருக்காது. இத்தவறுக்கு ககோதரர் பற்றிக் பிரவுனை மட்டும் தவறு கூறிவிட முடியாது. கட்சிகளைக் கடந்து தமிழர் நலனை மட்டும் முன்னிறுத்தி பயணிக்கின்ற தமிழர் தலைமையும்
அமைப்புக்களும் இல்லாமையும் இதற்கான காரணமாகும். இப்பலவீனத்தை சில அரசியல் வியாபாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைவதின் விளைவே அது. இது குறித்த சரியான புரிதலுடன் தமிழின நலனையும் ஏற்று சகோதரர் பற்றிக் எதிர்காலத்தில் பயணிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கனடிய சனத்தொகையில் 1 சதவீதம் உள்ள தமிழர்கள் விகிதாசாரப்படி 3 பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஒன்ராரியோ சனத்தொகையில் 2 சதவீதத்திற்கு குறைந்தது 2 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கவேண்டும். 1.5 சதவீத சனத்தொகையை கொண்டிருக்கும் சீக்கிய சகோதரர்கள் 5 சதவீத பாராளுமன்ற உறுப்பின்ர்களை கனடா தழுவி கொண்டிருப்பதற்கு அவர்கள் இனம் சார்ந்த அரசியலும் அதற்கான முன்னெடுப்புமே காரணம்.
கனடியத் தமிழர்களும் ஏனையவர்களுக்கு சேவகம் செய்யும் நிலையில் இருந்து தம்மை அரசியலில் வலுவுள்ள சக்தியாக மாற்றுவார்களா என்பதை ரூச் ரிவர் தேர்தல் நிர்ணயிக்கும். இனமாக எழப்போகின்றோமா இல்லை முள்ளிவாய்கால்களை நாமே எமக்கு தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டிருக்கப் போகின்N;றாமா? என்பதை உங்கள் முடிவுக்கே
விட்டுவிடுகின்றேன். புரிதலுடன் நீங்கள் எழுச்சிபெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி
நேரு குணரத்தினம்
[email protected]
5,578 total views, 1,172 views today
– See more at: http://www.canadamirror.com/canada/68077.html#sthash.kPFHMeQs.dpuf