பிரான்சில் துப்பாக்கிச்சூடு புரளியால் கூட்ட நெரிசல்: 40-கும் மேற்பட்டவர்கள் காயம்
பிரஞ்சு மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியான Juan-Les_Pins எனும் இடத்தில் துப்பாக்கிச் சூடு புரளியை அடுத்து கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதலில் இப்பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் பொலிசார் அந்த தகவலை மறுத்ததுடன், புரளியால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் என உறுதி செய்துள்ளனர்.
கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து அல்லது பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்களில் ஒருவர், அது துப்பாக்கி சத்தம் என தவறாக புரிந்து கொண்டதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சிக்கி சுமார் 40 நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தகவலறிந்ததை தொடர்ந்து ஏராளமான அவசர சிகிச்சை ஊர்திகளும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு முதலுதவி ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன.
இதே பகுதியில் இது இரண்டாவது சம்பவம் என்று கூறப்படுகிறது. தண்ணீர் போத்தல் ஒன்று வெடித்துச் சிதறியதில் அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரும் வெடிகுண்டு வெடித்துள்ளதாக கருதி அலறியடித்துக்கொண்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் பொலிசார் நடத்திய விசாரணையில் அது வெடிகுண்டு அல்ல என தெரிய வந்தது. Juan-Les_Pins கடற்கரை பகுதியானது நைஸ் நகரத்தில் இருந்து 27 கிலோ மீற்றர் தெற்கு அமைந்துள்ளது. இந்த நைஸ் நகரத்தில்தான் கடந்த மாதம் 84 உயிர்களை பறித்துக்கொண்ட கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.