கனடாவில் 5 சதவீத குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும்
கனடாவின் கியூபெக் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 5 சதவீதமான குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு தற்பொழுது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மாகாண முதல்வர்கள், பெருநிலப்பரப்புகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஒப்புதலை அளித்துள்ளனர்.
யோகொன் நகரில் உள்ள வைட்ஹோசில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் மாநாடொன்று இடம்பெற்றது. அதன் முடிவில் மாகாண முதல்வர்களும், பெருநிலப்பரப்புகளின் தலைவர்களும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதன்போதே இது தொடர்பாக கூட்டான அறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிட்டனர்.
கனடாவில் குடியமர விரும்பும் பிரெஞ்சு மொழி பேசும் குடிவரவாளர்கள் தொடர்பில், 13 மாகாண முதல்வர்களும், பெருநிலப்பரப்புகளின் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட முதலாவது அறிக்கை இதுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனேடியக் குரவரவு தொடர்பில் அண்மைக்காலமாக பல புதிய திட்டங்களை கொண்டுவருவதற்கு அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை நினைவுகூறத்தக்கது.