மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டார் தங்கமகன் அபிநவ் பிந்த்ரா: துயரத்தில் இந்தியா!
ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற 10மீ துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றில் அபிநவ் பிந்த்ரா நான்காவது இடத்தை பிடித்து மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.
இன்று நடந்த இறுதிச்சுற்றில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா உட்பட 8 பேர் பங்கேற்றனர்.
இதில், வெண்கலப் பதக்கத்திற்கு அபிநவ் பிந்த்ராவுக்கும், உக்ரைன் வீரர் Kulishற்கும் கடும் போட்டி நிலவியது.
இறுதியில் பிந்த்ரா 163.8 புள்ளிகள் எடுத்து நான்காவது இடம் பிடித்து பதக்கம் ஏதுமின்றி வெளியேறினார்.
போட்டியின் முடிவில் இத்தாலி வீரர் Niccolò Campriani 206.1 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
உக்ரைன் வீரர் Kulish 204.6 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கமும், ரஷ்யா வீரர் Vladimir Maslennikov 184.2 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கமும் தட்டிச்சென்றனர்.
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் அபிநவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர் என்பதும்,
ரியோ ஒலிம்பிக்ஸ் தங்கமகன் அபிநவ் பிந்த்ரா தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுத்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இம்முறையும் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிந்த்ரா, பதக்கத்தை தவறவிட்டுள்ளது இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.