அவுஸ்திரேலிய ’கங்காரு’வை கடித்து குதறிய இலங்கை ’சிங்கங்கள்’
காலே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்று தொடரை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பல்லேகலவில் நடந்த முதல் டெஸ்டில் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை, அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்நிலையில் காலே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய அவுஸ்திரேலிய அணி 229 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்த மோசமான தோல்வியால் அவுஸ்திரேலிய அணி பல மோசமான சாதனைகளை படைத்துள்ளது.
- ஆசிய மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு இது 3வது மிகப்பெரிய தோல்வியாகும். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதராக 356 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவிற்கு எதிராக 320 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
- அவுஸ்திரேலிய அணி இந்த தோல்வியின் மூலம் ஆசியக் கண்டத்தில் தொடர்ந்து 8 தோல்விகளை பதிவு செய்து 2வது இடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 10 தோல்விகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
- 1999ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை மட்டும்தான் அவுஸ்திரேலிய தவறவிட்டது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை இழந்துள்ளது.
- இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 501 பந்துகளை மட்டுமே அவுஸ்திரேலியா சந்தித்துள்ளது. இது 5வது முறையாக அந்த அணி குறைந்த பந்துகளை சந்தித்த போட்டியாகும். இதற்கு முன் 1994-95ல் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் 499 பந்துகளை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 1997ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஏமாற்றினர். அதன்பின் தற்போதுதான் எந்த வீரரரும் அரைசதம் அடிக்க முடியாமல் போயுள்ளது.