மீண்டும் அசத்திய குசால் மெண்டிஸ்: இலங்கை 281 ஓட்டங்கள் குவிப்பு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
தொடக்க வீரர்கள் தடுமாற்றம்
இதன்படி இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கருணாரத்னே (0), கெளஷால் சில்வா (5) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிந்தனர். இதனால் இலங்கை அணி 9 ஓட்டங்களுக்கே 2 விக்கெட்டை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
மீண்டும் அசத்திய குசால் மெண்டிஸ்
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் நிதான ஆட்டத்தை தொடந்தனர். குசால் பெரேரா (49) நாதன் லயன் சுழலில் வீழ்ந்து அரைசதத்தை தவறவிட்டார்.
இதன் பின்னர் குசால் மெண்டிஸ் உடன் அணித்தலைவர் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இவர்களும் பொறுமையாக ஆட இருவரும் அரைசதம் கடந்தனர்.
முதல் போட்டியில் சதம் விளாசிய குசால் மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டார்க் வேகத்தில் வெளியேறினார். அவர் 177 பந்தில் 10 பவுண்டரி 2 சிக்சர் என மொத்தம் 86 ஓட்டங்கள் எடுத்தார்.
சரிந்தது இலங்கை
இதைத் தொடர்ந்து அணித்தலைவர் மேத்யூஸ் 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சந்திமால் 5 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றினார்.
தனஜெய டி சில்வா தன் பங்கிற்கு 37 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த தில்ருவன் பெரேரா (16), ஹேரத் (14), சந்தகன் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை 281 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஸ்டார்க் அசத்தல்
இலங்கை அணியை தனது வேகத்தால் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். நாதன் லயன் 2, ஹாசில்வுட், மார்ஷ், ஹொலாண்ட் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடக்கமே மிரட்டல்
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை மிரட்ட ஆரம்பித்தனர் இலங்கை பந்துவீச்சாளர்கள்.
தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் டக்-அவுட் ஆக வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் வார்னர் 42 ஓட்டங்களில் ஆட்டமிழ்ந்தார். காவஜா ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில், விஷ்வ பெர்ணாடோ, தில்ருவான் பெரேரா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.