கோட்டை விட்ட கோஹ்லி! கைத்தட்டி வெறுப்பேற்றிய அவுஸ்திரேலிய ரசிகர்கள்
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கும் அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கும் எப்போதும் தில்லுமுல்லு நடந்து கொண்டே தான் இருக்கும்.
ஒரு வீரர் அவுஸ்திரேலியாவில் ஜொலித்தால் அதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் கோஹ்லி என்றால் மட்டும் அவர்களுக்கு ஆகவே ஆகாது.
இதனாலே அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே கோஹ்லி ஆடுகளத்தில் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
2011-12 ஆண்டில் கோஹ்லி முதன்முறையாக அவுஸ்திரேலியா சென்ற போதும் ரசிகர்கள் அவரை வெறுப்பேற்ற கடுப்பாகிய கோஹ்லி அவர்களை நோக்கி நடுவிரலை காட்டினார்.
இந்த நிகழ்வு சிட்னி மைதானத்தில் நடந்தது. இதனாலே கோஹ்லி சிட்னி ரசிகர்களுக்கு விரோதியானார். இந்த சம்பவம் கோஹ்லி மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடிலெய்டு மைதானத்தில் நடந்த அடுத்தப் போட்டியில் அதிரடி காட்டிய கோஹ்லி சதம் விளாசி விமர்சனங்களை தகர்த்தெறிந்தார்.
4 ஆண்டுகள் கழித்து இதேபோன்ற நிகழ்வு கடந்த ஆண்டு கோஹ்லிக்கு ஏற்பட்டது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி அதே சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த பிடியெடுப்பை தவறவிட்ட கோஹ்லி, பந்தை பவுண்டரி செல்லவிட்டார்.
தடுக்க வேண்டிய எளிதான பந்தை கோட்டை விட்டதால் பவுண்டரி லைனில் இருந்த ரசிகர்கள் கோஹ்லியை நோக்கி கைத்தட்டி வெறுப்பேற்றினர். கோஹ்லி தர்மசங்கட நிலையில் சிரித்தவாறே மீண்டும் மைதானத்திற்குள் சென்றார்.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 572 ஓட்டங்களும், இந்தியா 475 ஓட்டங்களும் குவித்தனர்.
பின்னர் 2வது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 251 ஓட்டங்கள் எடுத்து ’டிக்ளேர்’ செய்தது.
349 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 252 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டம் ’டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை அவுஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.