யாழ்ப்பாணம் பிரம்படியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இனந்தெரியாத கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பிரம்படிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மாலை எட்டுப் பேர் கொண்ட குழுவொன்று சென்றது. வீட்டின் கேற் மற்றும் கதவுகளை கைக் கோடரியாலும் வாள்களாலும் கொத்தி சேதமாக்கியது. வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசித் விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அந்தப் பகுதியில் நடமாடிய இருவர் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களை முறையாகக் கவனித்த மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொலிஸார் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற வீட்டைச் சேர்ந்த இளைஞனுக்கு ஆவா குழுவுடன் முன்னர் தொடர்பு இருந்தது என்றும், முன்பகை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.