திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்களை பரிந்துரைப்பதற்கான குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. திரிபுரா மாநிலத்துக்கு பிப்ரவரி 18ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்து சட்டபேரவைகளுக்கு பிப்ரவரி 27ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 3ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் உள்ளன.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியும், மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
நாகாலாந்து கூட்டணி அரசில் பாஜ இடம் பெற்றுள்ளது.
இந்த 3 மாநிலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜ காய்களை நகர்த்தி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தல் காங்கிரசுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்த உத்வேகத்தில் மேகாலயாவில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அண்மையில் இந்த கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவினர்.
இருப்பினும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில் இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான குழுவை ராகுல்காந்தி நியமித்துள்ளார்.
திரிபுராவில் முகுல்வாஸ்னிக் தலைமையிலும், மேகாலயாவுக்கு ஆஸ்கர் பெர்னான்டஸ் தலைமையிலும், நாகாலாந்துக்கு குமாரி செல்ஜா தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் ஜனார்தன் திவேதி உறுதி செய்துள்ளார்.