வழமைக்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும்: சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வுகூறல்
கனடாவின் பெரும்பாகங்களில் தற்போதைய வசந்த காலமானது, வழக்கத்திற்கு மாறாக அதிகளவான வெப்பத்துடன் காணப்படும் என்று கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், நோவா ஸ்கொட்டியா, நியூ பிரவுன்ஸ்விக், பிரின்ஸ் எட்வேர்ட் ஆகிய பகுதிகள் பனிக் காலத்தின் தாக்கத்திலிருந்து விடுபடும் முதல் பிராந்தியங்களாக காணப்படும் என்றும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறே ஏனைய பிராந்தியங்களிலும் பனிக் காலத்தின் தாக்கம் மிக விரைவில் குறைவடைந்து விடும் எனவும், நியூஃபவுண்ட்லான்ட் மற்றும் லேபடோர் ஆகிய பகுதிகள் வழக்கத்தினை விடவும் வெப்பம் குறைவான இடங்களாக காணப்படும் எனவும் சுற்றுச்சூழல் திணைக்கள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல இந்த ஆண்டின் இறுதியில் பனிப்பொழிவுக் காலமும் சற்று தாமதமாகவே தொடங்கும் என்ற போதிலும், அந்த பனிப்பொழிவு மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.