இத்தாலியில் கார்லோ ஸெக்சினி ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 12 ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் புதிய தேசிய சாதனையையும் தெற்காசிய சாதனையையும் இலங்கையின் யுப்புன் அபேகோன் நிலைநாட்டினார்.
செரி ஏ பிரிவில் 200 மீற்றர் போட்டி தூரத்தை 20.37 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன், தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தார். அத்துடன் இந்த நேரப் பெறுதி போட்டி சாதனையாகவும் பதிவானது.
செரி ஏ மற்றும் செரி பி ஆகிய 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தலா 7 வீரர்கள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் யப்புன் அபேகோன் முதலிடத்தைப் பெற்றார்.
கொழும்பில் 2018 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் வினோஜ் சுரஞ்சய நிலைநாட்டிய 20.68 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை இதன் மூலம் யுப்புன் அபேகோன் புதுப்பித்தார்.
அத்துடன் இந்திய வீரர் அமலன் போர்கொஹெய்ன் கடந்த மாதம் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டிய 20.52 செக்கன்கள் என்ற தெற்காசிய சாதனையையும் யுப்புன் அபேகோன் முறியடித்து புதிய தெற்காசிய சாதனையை நிலைநாட்டினார்.
இத்தாலியில் கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.15 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அந் நிகழ்ச்சிக்கான இலங்கை சாதனையும் யுப்புன் அபேகோனுக்கே சொந்தமாக இருக்கிறது.