2-வது போட்டி மழையால் ரத்து: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது சர்வதேச டி20 போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீச்சினை தெரிவு செய்தது. இதனை அடுத்து துடுப்பெடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சார்லஸ் 43(25) மற்றும் லூயிஸ் 7(6) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து விளையாடிய சாமுவேல்ஸ் 5(10), சிம்மன்ஸ் 19(19), பிளெட்சர் 3(9), பொல்லார்டு 13(8), ரஸ்செல் 13(15), பிரேவோ 3(6), பிராத்வெய்ட் 18(10) மற்றும் பத்ரீ 1(4) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பாக மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், சமி, அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி வெற்றி பெற 144 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் 2 ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து மழையின் பாதிப்பு இருந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.
முன்னதாக நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ஓட்டத்தில் திரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரினை கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை கைப்பற்றி அதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி பதிலடி கொடுத்துள்ளது.