யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதைப் போன்றதாகும் என்று இலங்கை்கான விஜயத்தை முன்னெடுத்த உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரிவித்தார்.
இலங்கைக்கு 14 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று தனது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து தனது மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் செய்தியாளர் சந்திப்பில் 23.10.2017 மேலும் குறிப்பிடுகையில்:
வடக்கு கிழக்கு தெற்குக்கு விஜயம் செய்தேன்.
நான் இலங்கைக்கு ஐந்தாவது தடவையாக விஜயம் செய்து பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயங்களை ஆராய்ந்திருக்கின்றேன். நான் இம்முறை அளுத்கம, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, புத்தளம், மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தேன். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்து கலந்துரையாடினேன்.
யார் யாரை சந்தித்தேன்?
கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், தேசிய சகவாழ்வு, அரசகரும மொழிகள் அமைச்சர், சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துசமய விவகார அமைச்சர், நீதி அமைச்சர், கல்வி அமைச்சர், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், சபாநாயகர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், இராணுவத்தளபதி, கடற்படை தளபதி, விமானப்படைத்தளபதி, தேசிய புலனாய்வு சேவை தலைமை அதிகாரி, பொலிஸ்மா அதிபர், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் தலைவர், நல்லிணக்கத்தை கூட்டிணைப்பதற்கான செயலகத்தின் செயலாளர், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இராஜதந்திர முக்கியஸ்தர்க்ள், கல்வியாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, மற்றும் கிழக்குமாகாண ஆளுநர்கள், உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். எனக்கு முன்னர் இலங்கைக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐ.நா. நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் விடயங்களையும் நான் கவனத்தில் எடுத்துள்ளேன்.
அடுத்ததாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது ஒரு சுயாதீனமான நியமனமாக இருக்கும் என கருதுகின்றேன். நம்பகரமானவர்களை இதற்கு நியமிக்கவேண்டும்.
விரட்டப்பட்ட முஸ்லிம்கள்
பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதாக பொறுப்புக்கூறல் பொறிமுறை அமையும். பாதிக்கப்பட்ட அனைவரும் நீதியை எதிர்பார்க்கின்றனர். 600 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் நீதி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக விரட்டப்பட்டனர். இவ்வாறு பட்டியல் நீள்கின்றது. இதுவொரு முடிவில்லாத பட்டியல் என்றே கூறலாம்.