கனேடியர்களின் பண்பை நினைத்து ரூடோ பெருமிதம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்டுள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில், மற்றவர்களுக்கு உதவும் கனேடியர்களின் பண்பை பாராட்டி கனேடியர் குறித்த தமது பெருமிதத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள ரூடோ, இந்த ஆண்டு அல்பேர்ட்டாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ அனர்த்தத்தின் போது, அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்வந்து உதவிகளைப் புரிந்த அனைவருக்கும் தனது நத்தார் வாழ்த்துக்களை காணிக்கையாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவசர தேவை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில், அனைத்துக் கனேடியர்களும் ஒன்றுபட்டு உதவ முன்வருகின்றமைக்கு அது ஒரு சிறந்து எடுத்துக்காட்டு எனவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
ஒருவருக்கு தேவை எற்படும் போது, அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எவ்வளவு தூரத்தில் இருப்பவர் போன்ற அனைத்தையும் கடந்து ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மை கனேடியர்களிடம் உள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மற்றவர்களுக்கு உதவும் கனேடியர்களின் இந்த நற்செயல்கள் தொடர வேண்டும் என்பதையும் இதன்போது பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை போர் நிலைமைகளில் தங்களின் நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்குள் வருகைதரும் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளுக்கும் கனேடியர்கள் உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தமது நத்தார் வாழ்த்துச் செய்தியில் முன்வைத்துள்ளார்.