மும்பைத் தாக்குதலின் நினைவு தினமான இன்று, அனைத்து வகையிலும் தீவிரவாதத்தினை அழிக்க அனைவரும் உறுதியேற்போம் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி, மும்பையில் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர். மும்பையின் பிரதான எட்டு இடங்களில் ஒரே தடவையில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதல் காரணமாக 166பேர் உயிரிழந்ததோடு, 308 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் இந்திய ஜனாதிபதி தனது உத்தியோக பூர்வ டுவட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் மூலமாகவே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மும்பை தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் தனது இரங்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், நம்முடைய மக்கள் மட்டுமல்லாது நாடு, உலகம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம் எனவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.