விஜய் நடித்த ஷாஜஹான் படத்தை இயக்கிய ரவி அப்புலு, 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கி உள்ள படம் செயல். சி.ஆர்.கிரியேஷன்ஸ் சார்பில் நிர்மலா ராஜனும், திவ்ய ஷேத்ரா பிலிம்சும் இணைந்து தயாரித்துள்ளனர். புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர், தருஷி ஆகியோருடன் ரேணுகா, முனீஷ்காந்த், வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர். வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், சித்தார்த்விபின் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ரவி அப்புலு கூறியதாவது:
வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணிக்கும், ஹீரோவுக்கும் நடக்கும் முட்டல் மோதல் கதை தான் செயல். மார்க்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஹீரோ செய்த ஒரு நல்ல செயல் அடுத்தவர்களையும் செய்ய தூண்டுகிற செயலாக இருக்கும். கதாநாயகியாக நடித்திருக்கும் தருஷி ஹீரோ தன்னிடம் காதலை சொல்ல வரும் போதெல்லாம் அவர் செய்யக்கூடிய விஷயங்கள் அனைவரையும் கவரும் என்கிறார் ரவி அப்புலு.