புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 105 வயதிலும், நலமுடன், அன்றாட பணிகளை செய்து வரும் முதியவர், மூக்கையாவிடம் பலர் நலம் விசாரித்து செல்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, கருப்பக்கோன் தெருவைச் சேர்ந்தவர், மூக்கையா, 105. இவருக்கு செல்லாயி, 90, என்ற மனைவி உள்ளார்.தம்பதிக்கு, 70 – 44 வயது வரை, ஆறு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இவர்களில், மூத்த மகள், 70 வயதிலும், மற்றொரு மகள், 59 வயதிலும், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர்.
மூக்கையா – செல்லாயி தம்பதிக்கு, 11 பேரன்கள், 10 பேத்திகள், ஆறு கொள்ளு பேரன்கள், ஏழு கொள்ளு பேத்திகள் உள்ளனர்.முதியவர், மூக்கையா கூறியதாவது:தற்போது எனக்கு, 105 வயது ஆகிறது. என் மாமா மகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தால், 30 வயதில் தான் திருமணம் நடந்தது. அப்போது, என் மனைவிக்கு, 15 வயது தான். மாமா மகள் மீது வைத்திருந்த காதலால், 30 வயது வரை காத்திருந்தேன்.
திண்ணைப் படிப்பில் ஒருசில ஆண்டுகள் படித்தேன். பின், விவசாய வேலை, மரம் வெட்டுதல் போன்ற கூலி வேலைக்கு செல்வேன்; கடினமாக உழைப்பேன். சிறு தானியங்களான கேப்பை, வரகு, சோளம், கம்பு போன்றவற்றை சாப்பிட்டதால், அதிகமாக நோய் வந்ததும் இல்லை; மருத்துவமனைக்கு சென்றதுமில்லை. இதே போல, என் பிள்ளைகளையும், பேரன்களையும் வளர்த்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இவரது கடைசி மகன், தனவேந்தன் கூறுகையில், ”என் தந்தைக்கு, 105 வயது என, கேள்விப்பட்ட பலர், அவரிடம் வந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். மிக விரைவில், என் பெற்றோருக்கு, பூர்ணாபிஷேக சாந்தி விழா எடுக்க இருக்கிறோம்,” என்றார்.