ஹொண்டுராஸ் தலைநகரில் 8 சடலங்கள்
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் தலைநகர் டெக்யூசிகால்பாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அடையாளம் தெரியாத 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடையே இடம்பெற்ற தகறாறே இக்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆயினும் ஹொண்டுராஸில் பாதுகாப்பு நிலைமைகள் பலவீனமடைந்துள்ளமையே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற வழிவகுப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
நாட்டின் பிரதான நகரங்களில் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒப்பந்தக் கொலைகள் என்பவற்றில் பல கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம் குறித்த கும்பல்களினால் கொலை செய்யப்பட்டவர்களின் விகிதம், ஒவ்வொரு ஒரு இலட்சம் மக்களுக்கும் 60 பேர் என்ற வகையில் காணப்பட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.