அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை குறைந்த வெற்றி இலக்கையும் எடுக்க விடாமல் நசுக்கிய இலங்கை இடது கை வீச்சாளர் ரங்கனா ஹெராத், உலகிலேயே முதன் முதலாக 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய இடது கை சுழற்பந்து வீச்சாளரானார்.
மேலும் அபுதாபியில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி இலங்கை என்ற பெருமையையும் சேர்த்தார் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த ரங்கனா ஹெராத்.
இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்குப் பிறகே பெற்ற வெற்றிகளில் ஹெராத் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளார், ஆனால் இவரது டெஸ்ட் வாழ்க்கை கேள்விக்குறியான சமயத்தில் இவருக்கு உதவி புரிந்தவர் சங்கக்காரா என்பது சிலருக்கே தெரிந்த உண்மை.
ஜூலை 2009-ல் சங்கக்காரா தனது முதல் டெஸ்ட் கேப்டன்சியைக் கையாண்ட போது, முரளிதரனுக்கு முழங்கால் காயமேற்பட்டு ஆட முடியாமல் போனது. புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் அணியில் இருந்தார். அப்பொது முரளிதரன் இடத்துக்கு சுரஜ் ரந்திவ் என்ற ஆஃப் ஸ்பின்னருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சுரஜ் ரந்திவ் தான் சேவாக் சதமடிக்க முடியாமல் அழுகுணி நோ-பால் வீசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்போதைய கேப்டன் சங்கக்காரா தேர்வுக்குழுவைச் சந்தித்தப் போது ரங்கனா ஹெராத் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாதாடினார். அத்தருணத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் கூட ஹெராத் இல்லை.
இது குறித்து சங்கக்காரா கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “முரளிதரன் இல்லாத போது ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி ரங்கனா ஹெராத் 7 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்தது என் நினைவில் இருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகள் மனிதர் எங்கு போனார் என்று தெரியவில்லை. ரங்கனாவுக்கு என்னதான் நடந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன், இந்நிலையில் முரளிதரனிடம் பேசி அவரை மீண்டும் அழைக்க முடிவு செய்தேன்.
அஜந்தா இருந்தார், அவர் புதிர் பவுலர். 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியர்கள் இங்கு ரங்கனா ஹெராத் பந்து வீச்சை தடவு தடவென்று தடவினர். வலது, இடது கை வீரர் என்றெல்லாம் ஹெராத்துக்கு எதுவும் இல்லை, பேட்ஸ்மென்களின் யோசனையைக் கடந்து சென்று வெல்பவர். அண்ட 15 மட்டத்திலிருந்து நாங்கள் எங்கள் பள்ளிகளுக்காக ஆடும் போதிலிருந்தே எனக்கு ஹெராத்தைத் தெரியும். அவர் எதற்கும் பயப்படக்கூடியவர் அல்ல.
தேர்வுக்குழுவுக்கும் நான் நன்றி கூற வேண்டும், அவர் இலங்கை கிரிக்கெட் அமைப்பில் எதிலும் இல்லை, ஆனால் அசந்தா டிமெலிடம் நான் ஹெராத் வேண்டுமென்றேன், அவர் உடனே ஒத்துழைத்தார். அழைத்தவுடனேயே டெஸ்ட் தொடருக்குத் தயாராக இருந்தார் ஹெராத், இதுதான் அவரது சிறப்பு.” என்றார் சங்கக்காரா.
அன்று இந்தத் தேர்வுக்காக இலங்கை கிரிக்கெட்டை பின்னோக்கி இழுத்து விட்டார் சங்கக்காரா என்று பலரும் விமர்சித்த நிலையில் திரும்பி வந்த பிறகு 70 டெஸ்ட் போட்டிகளில் 364 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் இந்தக் கால அளவில் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியுள்ள மற்றொரு வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.