ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை இலங்கை அரசாங்கம், கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இலங்கை உடனான உறவுகளின் வலிமை மற்றும் உறுதியான தன்மை குறித்து நாங்கள் உண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அது ஆழமாக வேரூன்றிய, பல பரிமாணங்களைக் கொண்டது. இலங்கையுடனான எமது உறவுகள் சொந்த காலிலேயே உள்ளன. எமது உறவுகள் எந்தவொரு மூன்றாவது நாட்டிலும் தங்கியிருக்கவில்லை.
பிராந்தியத்தின் பாதுகாப்பு கரிசனையுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து நாம் இலங்கையுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருிகின்றோம்.
எமது பாதுகாப்புக் கரிசனைகளையும், உணர்வுகளையும் இலங்பை நண்பர்கள் மனதில் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.”என அவர் தெரிவித்துள்ளார்.