வைத்தியசாலைக்குள் புகுந்த வாள்வெட்டு குழு..! பருத்தித்துறை வைத்தியசாலையில் பதற்றம்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, துன்னாலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் காரணமாக படுகாயமடைந்த சிலர் பருத்திதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை வெட்டுவதற்கு மூவர் கொண்ட குழு வாள்களுடன் வைத்தியசாலையில் புகுந்தமையினால் பெரும் பதற்றம் நிலவியது.
நேற்று காலை இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் அண்ணன், தம்பி உட்பட மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்காக மூவர் கொண்ட குழு ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் புகுந்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலைப் பொலிஸார் ஒருவர் இருப்பதனை அவதானித்த வாள்களுடன் புகுந்த குழுவினர் வைத்தியசாலைக்கு வெளியே வந்து காத்து நின்றுள்ளனர்.
இதனையடுத்து நூற்றுக்கணக்கான நோயாளர்களின் பாதுகாப்புக் கருதி வைத்தியசாலையின் வாயிற்கதவு மூடப்பட்டதுடன், உடனடியாக பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விரைந்து செயற்பட்ட பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் விரைவாக சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து கதவு திறக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் வரை பருத்தித்துறை வைத்தியசாலைப் பகுதியில் பெரும் பதற்றமாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.