வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், ஒரே ஒரு டி20, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட்டில், இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. வெறும் மூன்றே நாட்களில் போட்டி முடிவுக்கு வந்தது.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கர்ட்லி அம்புரோஸ் கூறுகையில், ‘’போட்டி நடந்த 3 நாட்களும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் எந்தவிதமான ஆக்ரோஷத்தையும் நான் பார்க்கவே இல்லை. இங்கிலாந்தை வீழ்த்தும் வகையில் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் காணப்படவில்லை.
இதை பார்க்க வேதனையாக இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இதுவரை பார்த்த விஷயங்களே பரிதாபமாக உள்ளது. எஞ்சிய 2 டெஸ்ட்களில் வெஸ்ட் இண்டீஸ் எப்படி விளையாடப்போகிறது? என தெரியவில்லை’’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸின் தடுமாற்றம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்கட் கூறுகையில், ‘’50 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி கொண்டும், பார்த்து கொண்டும், வர்ணனை செய்து கொண்டும் உள்ளேன். தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ்தான் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான டெஸ்ட் அணி.
பேட்டிங், பந்து வீச்சு என எதிலும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஒரு காலத்தில் மிகவும் வலுவாக இருந்த ஒரு அணி இப்படி மோசமாக செயல்படுவதை பார்க்கையில் வருத்தமாக உள்ளது’’ என்றார்.
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் வரும் 25ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.