தமிழக அரசியலை புரட்டிப் போடும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் சூடுப்பிடித்து வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனையை நடத்தியுள்ளனர்.
இச்சோதனையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் ஆவணங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கிய ஆவணங்களில் ‘ஆர்.நகர் இடைத்தேர்லில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.4,000 கொடுக்க திட்டமிட்டது’ தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தொகுதியை சேர்ந்த 85 சதவிகித வாக்காளர்கள் அனைவருக்கும் பணம் போய் சேர வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், இந்த திட்டமிடல் பணியில் தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, கல்வி அமைச்சரான செங்கோட்டையன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை விஜயபாஸ்கர் மற்றும் பிற முக்கிய அமைச்சர்கள் மீறியுள்ளது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் போலியானதா அல்லது உண்மையான ரூபாய் நோட்டுகளா? என்பது குறித்தும் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் வெளியாகியுள்ள இத்தகவல்களை தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் மீது பொலிசாரிடமும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புகார்களின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய அமைச்சர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.