“கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டி மாநகர சபையைக் கைப்பற்றிய பின்னரே சிறிகொத்த திரும்புவோம்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று சபதம் எடுத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க.
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ரோஸி இவ்வாறு சூளுரைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெண் வேட்பாளர்களுக்குரிய வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சியே வழங்கியது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் முதல் தடவையாக பெண்ணொருவர் பிரதான கட்சியில் மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்காக பிரதமருக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடுவோம். இதற்காக 113 பேர் கொண்ட எமது அணி தீவிரமாகச் செயற்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகவே கொழும்பு மாநகர சபை திகழ்கின்றது. எந்தவொரு கட்சியாலும் இன்னும் வெற்றிக்கொடியை நாட்டமுடியாமலுள்ளது.
அன்று எமது கோரிக்கைக்கு மதிப்பளித்து சுயேச்சையை வெற்றிபெற வைத்த கட்சித் தொண்டர்கள் வாழும் பகுதி இது.
எனவே, இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி நிச்சயம். அந்த இலக்கை அடைந்த பின்னரே சிறிகொத்த திரும்புவோம்” என்றார்.