17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பைத் தொடரின் கால் இறுதிப் போட்டிக்கு, அமெரிக்காவும் ஜெர்மனியும் தகுதி பெற்றுள்ளன. டெல்லி நேரு மைதானத்தில் நேற்று நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில், முறையே பராகுவே மற்றும் கொலம்பியாவை அந்த அணிகள் வீழ்த்தின.
மாலை 5 மணிக்கு நடந்த `First Round of 16′ போட்டியில் ஜெர்மனி – கொலம்பியா அணிகளுக்கிடையிலான ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே ஜெர்மனி அணியின் கை ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கொலம்பியா கோல்கீப்பர் கெவின் மியர் தவறிழைக்க, அதைப் பயன்படுத்தி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார் ஜெர்மனி அணியின் கேப்டன் ஜான் ஃபிடே ஆர்ப். அதன் பிறகும் ஜெர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்தது. 39-வது நிமிடத்தில் சவேர்தி செடின் அடித்த கார்னரை தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தார் ஜெர்மனி வீரர் யான் பிஸ்ஸெக். முதல் பாதியில் 2 – 0 என முன்னிலை பெற்றது ஜெர்மனி.
இரண்டாம் பாதி தொடங்கியதும் கொலம்பியாவுக்கு மேலும் அதிர்ச்சியளித்தனர் ஜெர்மனி வீரர்கள். ஆட்டம் மீண்டும் தொடங்கிய 4-வது நிமிடத்தில், கேப்டன் ஃபிடே ஆர்ப் கொடுத்த பாஸை கோலாக்கினார் ஜான் எபோவா. அவரது ஆட்டம் கொலம்பிய வீரர்களை ஆட்டுவித்தது. முதல் பாதியிலேயே அவர் பல கோல்கள் அடித்திருப்பார். ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில்கூட, அவர் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டுத் திரும்பியது.
75-வது நிமிடத்தில் ஃபிடே ஆர்ப் தனது இரண்டாவது கோலை அடிக்க, 4 – 0 என்ற முன்னிலை பெற்றது ஜெர்மனி. லீக் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட கொலம்பிய அணி, ஜெர்மனி வீரர்களின் தாக்குதல் ஆட்டத்துக்கு முன் நிலைகுலைந்துபோனது. இந்தப் போட்டியில் மஞ்சள் அட்டை பெற்ற அமெரிக்க வீரர் டெனிஸ் ஜாஸ்ட்ரம்ப்ஸ்கி, கால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாது. ஜெர்மனி அணி கால் இறுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசில் அல்லது ஹோண்டுராஸ் அணியைச் சந்திக்கும். அந்தப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும்.
அமெரிக்க அணி Round of 16′ போட்டியில் பராகுவேவைப் பதம்பார்த்தது. இரவு 8 மணிக்கு நடந்த இந்தப் போட்டியில் அமெரிக்க அணி 5 – 0 என வெற்றி கண்டது. அந்த அணி வீரர் டிம் வியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இங்கிலாந்து – ஜப்பான் போட்டியில் வெல்லும் அணியுடன், அமெரிக்கா கால் இறுதியில் மோதும். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறும்.
அமெரிக்கா – பராகுவே மோதிய போட்டியில், 19-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்படும் வரை ஆட்டம் சமமாகத்தான் சென்றது. அமெரிக்காவின் வியா அந்த கோலை அடித்த பிறகும்கூட, பராகுவே அணி நம்பிக்கையுடன் போராடியது. அடிக்கடி அமெரிக்க அணியின் பகுதியை டார்கெட் செய்தனர் பராகுவே வீரர்கள். ஆனால், அவர்களால் கோல்தான் அடிக்க முடியவில்லை. அமெரிக்காவும் அவ்வப்போது கவுன்ட்டர் அட்டாக்கில் ஈடுபடத் தவறவில்லை. முதல் பாதி 1 – 0 என முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதி தொடங்கியதும் வியாவையும் அமெரிக்காவையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பராகுவேயின் தடுப்பாட்டத்தை அவர்கள் தகர்த்தெறிந்தனர். 53-வது நிமிடத்தில் அமெரிக்க இரண்டாவது கோலை அடித்தது. பாக்ஸுக்கு வெளியில் இருந்து வியா அடித்த பந்து, யாரும் நம்பாத வகையில் வலைக்குள் புகுந்தது. பராகுவே வீரர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்த 10 நிமிடத்திலேயே அணியின் மூன்றாவது கோல் அடித்தார் சார்லேடன். நட்சத்திர நாயகன் சார்ஜென்டும் தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, 77-வது நிமிடத்தில் தனது மூன்றாவது கோலை அடித்து அசத்தினார் வியா. இறுதியில் 5 – 0 என அபார வெற்றி பெற்றது அமெரிக்கா.
இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. கோவாவில் 5 மணிக்கு நடக்கும் போட்டியில் ஈரான் – மெக்ஸிகோ ஆட்டம் நடக்கிறது. 8 மணிக்கு அதே மைதானத்தில் மாலி – ஈராக் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5 மணிக்கு கவுஹாத்தியில் நடக்கும் போட்டியில் ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. கொல்கத்தாவில் 8 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து – ஜப்பான் அணிகள் கால் இறுதி வாய்ப்பை எதிர்நோக்கி மோதுகின்றன.